
கோலாலாம்பூர், டிசம்பர்-30,
பிரிக்ஃபீல்ட்ஸ் போலீஸ் நிலையம் எதிரே, பங்சார் நோக்கிச் செல்லும் Jalan Travers சாலை குண்டும் குழியுமாக வாகனமோட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் இருப்பது, பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக ஓரிடத்தில் குழி மோசமாக உள்ளது வணக்கம் மலேசியாவின் கண்ணோட்டத்தில் தெரிய வந்தது.
தலைநகரின் மையப்பகுதியில் அதுவும் சுற்றுப் பயணிகள் அதிகம் வந்துபோகும் இடத்தில், சாலை இந்தளவுக்கு மோசமாக இருப்பது, ஒரு பக்கம் அதிர்ச்சியையும் இன்னொரு பக்கம் பாதுகாப்பு குறித்த கவலையையும் உண்டாகியுள்ளது.
மேலிருந்து சாலைப் பிரியும் இடத்தில் இப்படி குண்டும் குழியுமாக இருப்பது நிச்சயம் வாகனங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.
மாதக் கணக்கில் இந்நிலை கவனிப்பாரற்று கிடப்பதாக, பொது மக்களில் சிலர் வணக்கம் மலேசியாவுக்கே அழைத்து தங்களின் ஏமாற்றத்தைத் தெரிவித்தனர்.
இந்நிலையில், வாகனமோட்டிகள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதிகாரத் தரப்பு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சாலை பயணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சாலை விபத்துகளுக்கு வாகனமோட்டிகள் மட்டும் காரணமல்ல; பல நேரங்களில் சாலைகளின் நிலையும் தரமும் காரணமென்பதை உணர்ந்து, சம்பந்தப்பட்டோர் இதில் உடனடி நடவடிக்கை எடுப்பதே நல்லது.



