
தெஹ்ரான், மார்ச்-11-அமெரிக்காவுடனான கடும் சண்டையால் மத்தியக் கிழக்கில் பதற்றம் அதிகரித்தாலும், போர்நிறுத்தத்தை நாடவில்லை என ஈரான் அறிவித்துள்ளது.
“தாக்குதல் நடத்தியவர்களுக்கு தக்கப் பாடம் கற்பிக்கும் வரை போராட்டம் நிறுத்தப்படாது” என ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் Mohammad Bagher Ghalibaf கூறினார்.
அமெரிக்காவின் எத்தகைய மிரட்டல்களுக்கும் ஈரான் அடிபணியாது; மாறாக அதன் பாதுகாப்பையும் நாட்டின் இறையாண்மையையும் காப்பாற்ற நடவடிக்கை தொடரும் என அவர் சூளுரைத்தார்.
“நாங்கள் கொடுக்கும் பதிலடி, இன்னொரு முறை எங்கள் மீது கை வைப்பதற்கே அமெரிக்கா யோசிக்கும் அளவுக்கு கடுமையானதாக இருக்கும்” என்றார் அவர்.
Hormuz நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டால் அல்லது அமெரிக்க நலன்கள் பாதிக்கப்பட்டால் கடுமையான பதிலடி இருக்கும் என, அதிபர் டோனல்ட் ட்ரம்ப் எச்சரித்த பிறகும் ஈரான் இறங்கி வராதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் சில இராணுவ மற்றும் வியூக இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானும் சளைக்காமல் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுத்து வருகிறது.
இப்படியே போனால் நிலைமை மேலும் மோசமடையக் கூடும் என்ற அச்சத்தில், போர்நிறுத்தத்திற்கு உலக நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன…



