பத்து பஹாட், செப்டம்பர் -3, ஜோகூர், பத்து பஹாட்டில் 69 வயது மூதாட்டியிடம் கொள்ளையிட்டக் குற்றத்தை ஒப்புக் கொண்ட 31 வயது ஆடவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஏற்கனவே இதே போன்ற கொள்ளைக் குற்றத்திற்காக தண்டனைப் பெற்றவரான அந்நபருக்கு, நீதிபதி 1 பிரம்படியும் விதித்து தீர்ப்பளித்தார்.
“நீங்கள் கொள்ளையிடுவது இது முதன் முறையல்ல. இரண்டாவது முறை. உங்களால் பாதிக்கப்படுபவர்களை நீங்கள் நினைத்துப் பார்த்ததுண்டா?” என தீர்ப்பை வாசிக்கும் போது நீதிபதி கடிந்துக் கொண்டார்.
முன்னதாக, நீதிபதியிடம் முறையிட வாய்ப்பு வழங்கப்பட்ட போது, 4 மாதங்களாக வீட்டு வாடகையைக் கட்ட முடியாததால் வேறு வழியின்றி கொள்ளையிட முடிவுச் செய்ததாக 4 பிள்ளைகளுக்குத் தந்தையான அவ்வாடவர் சொன்னார்.
“நிலையில்லாத வேலை, பிள்ளைகளையும் மனைவியையும் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது; வேறென்ன செய்வேன் நான்” என அவர் அழுதுக் கொண்டே நீதிபதியிடம் கூறினார்.
ஆகஸ்ட் 26-ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு Semerah, Kampung Parit Haji Baijuri-யில் உள்ள வீட்டில் புகுந்து, மூதாட்டிக்குச் சொந்தமான ஒரு தங்கச் சங்கிலியையும் தங்க வளையலையும் கொள்ளையிட்டதாக, அவர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
கொள்ளையிட்ட பொருட்களை பத்து பஹாட்டில் உள்ள நகைக்கடையொன்றில் விற்றது CCTV கேமராவில் சிக்கியதை அடுத்து, அந்நபர் போலீசிடம் பிடிபட்டார்.