
பஹாங்கில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த டெஸ்லா கார்; 4 வயது சிறுவன் உட்பட ஐவர் காயம்
பஹாங், பிப்ரவரி 16 –
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஜாலான் தெங்கு இஸ்மாயில் சாலையில் நடந்த பல வாகனங்கள் சேர்ந்த சாலை விபத்தில் 4 வயது சிறுவன் உட்பட ஐவர் காயமடைந்தனர்.
மாலை சுமார் 5.30 மணியளவில், 31 வயது பெண் ஓட்டிச் சென்ற டெஸ்லா வகை வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மூன்று வாகனங்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக போலீசார் தெரிவித்தனர்.
தெமர்லோ மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் முகமட் நாசிம் பாரோன் (Asisten Komisioner Mohd Nasyim Bahron) கூறியதாவது, தெமர்லோ நகரிலிருந்து மெந்தகாப் நோக்கிச் சென்ற டெஸ்லா கார் முதலில் சிவப்பு நிற பெரோடுவா மைவி காரை மோதியது. மோதலின் தாக்கத்தால் மைவி கார் முன்னோக்கி தள்ளப்பட்டு அருகில் நிறுத்தப்பட்டிருந்த யமஹா மோட்டார் சைக்கிளை மோதியது.
அதே சமயம், டெஸ்லா கார் அங்கு நிறுத்தப்பட்டிருந்த நீல நிற பெரோடுவா வீவா காரையும் மோதியது.
இந்த விபத்தில் 32 வயது மைவி ஓட்டுநருக்கு வலது தோள்பட்டை முறிவு ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும், 29 வயது பெண்ணுக்கு வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், 28 வயது பெண்ணும் 4 வயது சிறுவனும் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெஸ்லா கார் ஓட்டுநர் உட்பட காயமடைந்த அனைவரும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



