
கோலாலம்பூர், ஏப் 7 – பெண் நோயாளி ஒருவரை ஏமாற்றி ஆடைகளை கழற்றச் சொன்னதாக கூறப்படும் மருத்துவர் ஒருவர் நேற்று பினாங்கில் கைது செய்யப்பட்டார்.
நோயாளியை பரிசோதனை செய்தபோது அவரது உடலை கைதொலைபேசியினால் அந்த 43 வயதுடைய மருத்துவர் புகைப்படம் எடுத்ததாக சந்தேகிக்கப்படுவதாக பினாங்கு தீமோர் லாவுட் (Timur Laut) போலீஸ் தலைவர் லீ சுவி சாக் ( Lee Swee Sake ) தெரிவித்தார்.
இரத்த பரிசோதனையின் முடிவை தெரிந்துகொள்ள Pulau Tikus சிலுள்ள தனியார் கிளினிக்கிற்கு 30 வயது பெண் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்றபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமையன்று சம்பந்தப்பட்ட பெண் போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து அந்த மருத்துவர் தாமாகவே போலீஸ் நிலையத்திற்கு வந்தபோது கைது செய்யப்பட்டார் என லீ தெரிவித்தார்.
திங்கட்கிழமைவரை நான்கு நாட்களுக்கு அந்த நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 509, குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்கிறது, அதே நேரத்தில் சிறு குற்றங்கள் சட்டத்தின் 14ஆவது பிரிவு , அதிகபட்சமாக 100 ரிங்கிட் அபராதம் விதிக்க அனுமதிக்கிறது.