
பாங்கி, ஏப்ரல்-24-சிலாங்கூர், பாங்கியில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் குறித்துச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தவறான தகவல்களுக்கு ஆலய நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இவ்வாலயம் ஒரு “குடும்பக் கோவில்” என்று கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை என நிர்வாகம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.
கடந்த 1950-ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து இது பொது மக்களுக்கான வழிபாட்டுத் தலமாகவே இயங்கி வருகிறது.
2002-ஆம் ஆண்டில் ROS எனப்படும் சங்கப் பதிவிலாகாவிலும் இது சட்டப்பூர்வமாகப் பதிவச் செய்யப்பட்டுள்ளது.
ஆலயத்தின் நிதி மற்றும் சொத்துகள் அனைத்தும் வெளிப்படையான முறையில் முறையாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இதற்காக நிலம் ஒதுக்கப்பட்டு தற்போது அரசு பதிவேட்டில் பதிவுச் செய்யும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன.
மேலும், ஆலய நிலத்திற்கும் பாங்கி தமிழ்ப் பள்ளி நில விவகாரத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதையும் ஆலய வழக்கறிஞர் கேப்ரியல் சூசையன் தெளிவுப்படுத்தினார்.
இவ்வேளையில், சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில் பொய்யான தகவல்களைப் பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆலய துணைத் தலைவர் ஸ்ரீ ரங்கன் பத்துமலை வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.
சாதி, மத பேதமின்றி அனைவரும் சமம் என்ற உயரிய கொள்கையோடு ஆலயம் செயல்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.



