
பாசிர் கூடாங், ஆகஸ்ட் 17 – பாசிர் கூடாங் தொழிற்பேட்டை பகுதியிலுள்ள நீர்த்தொட்டியில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டார்.
இரவு 9.51 மணியளவில் சம்பவம் தொடர்பாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு அவசர அழைப்பு கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள், சுமார் 20 அடி உயரமுள்ள 15,000 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட தொழிற்சாலை கழிவுநீர் தொட்டிக்குள் இளைஞர் இருந்ததைக் கண்டறிந்தனர்.
சுமார் 1.5 மீட்டர் ஆழத்தில் இருந்த அவரை, சிறப்பு மீட்பு கயிறு மற்றும் ஸ்ட்ரெச்சர் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் வெளியே கொண்டு வந்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவ அதிகாரி, இளைஞர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தார். பின்னர் அவரது உடல் மேல் நடவடிக்கைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.



