
புக்கிட் மெர்தாஜாம், அக்-1-பினாங்கில் கழிவறையில் நான்கு பெண்கள் சிறுநீர் கழிப்பதை வீடியோ பதிவு செய்தது மற்றும் ஆபாச காணொளிகளை வைத்திருந்தது தொடர்பில் 22 வயது இளைஞர் மீது ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. எனினும் Muhammad Mukhlis Sulaiman எனும் அவ்விளைஞர் அக்குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்து விசாரணை கோரினார்.
செப்டம்பர் 2 மற்றும் 23 ஆம் தேதிகளில் Bukit Minyak பகுதியில் உள்ள தொழிற்சாலை கழிவறையில் நான்கு பெண்களை அவர்களின் அனுமதியின்றி வீடியோ பதிவு செய்ததாக முதல் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது அவை இரண்டுமே விதிக்கப்படலாம்.
ஐந்தாவது குற்றச்சாட்டில், செப்டம்பர் 24 ஆம் தேதி Seberang Perai Tengah மாவட்டக் காவல் தலைமையக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பல ஆபாச காணொளிகளை வைத்திருந்ததாகக் கூறப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அவ்விளைஞருக்கு 15,000 ரிங்கிட் பிணை வழங்கிய நீதிமன்றம், வழக்கு முடியும் வரை பாதிக்கப்பட்டவர்களை அணுகக்கூடாது என உத்தரவிட்டது. அவ்வழக்கு நவம்பர் 19 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.



