
மாச்சாங், ஜூலை.02 – மச்சாங்-கோலா கிராய் சாலையின் 41 ஆவது கிலோமீட்டரில் SUV வாகனமொன்று ஏழு மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்ததில் ஐந்து சீனப் பிரஜைகள் காயமடைந்தனர். அவர்கள் ஐவரும் Temangan- இல் இருந்து Tok Bali சென்று கொண்டிருந்த போது அச்சம்பவம் நிகழ்ந்தது. அந்த ஐவரில் ஒருவரான 66 வயது முதியவர் பாதை காட்டும் செயலியைப் பயன்படுத்தி Toyota Prius வாகனத்தைச் செலுத்தியுள்ளார். அவ்வாகனம் பின்னர் கட்டுமானத் தளமொன்றில் நுழைந்து எதிர்பாராத விதமாக பள்ளத்தில் விழுந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக மாச்சாங் மாவட்ட போலீஸ் தலைவர் Suprintendan Azuhar Md Nor தெரிவித்தார்.
அச்சம்பவம் குறித்து நள்ளிரவு 12.01 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக அவர் கூறினார். காயமுற்ற 40தில் இருந்து 66 வயதுக்குட்பட்ட அவர்களில் மூவர் ஆண்கள். எஞ்சிய இருவர் பெண்கள் ஆவர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.
இவ்வேளையில், சாலைப் பயனீட்டாளர்கள் பாதை காட்டும் செயலியை மட்டும் நம்பியிராமல் எச்சரிக்கைப் பலகைகள், பாதுகாப்புக் கோன்கள், கட்டுமானத் தளங்களில் வைக்கப்பட்டிருக்கும் தடுப்புகள் ஆகியவற்றைக் கவனத்தில் கொள்ளுமாறு Azuhar Md Nor ஆலோசனை கூறினார்.



