Latestமலேசியா

பாரிசான் நேஷனல் அரசை வீழ்த்த அமெரிக்கா உதவ முன்வந்ததா?: ஹாடி அவாங்கிடம் விசாரணை நடத்த போலீஸ் முடிவு

கோலாலம்பூர், செப்டம்பர்-8,கடந்த 2014-ஆம் ஆண்டில் அப்போதைய பாரிசான் நேஷனல் (BN) அரசாங்கத்தைக் கவிழ்க்க அமெரிக்கா பாஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட முன்வந்ததாகக் கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக, பாஸ் கட்சித் தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கிடம் வாக்குமூலம் பெறப் போவதாகப் புக்கிட் அமான் போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

​இது தொடர்பாக இதுவரை 12 போலீஸ் புகார்கள் பெறப்பட்டு, 12 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.

​பொது மக்களிடையே பயத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதற்காகக் குற்றவியல் சட்டத்தின் கீழும், இணையத்தின் தவறான பயன்பாட்டுக்காகத் தொடர்பு மற்றும் பல்லூடச் சட்டத்தின் கீழும் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பொது மக்கள் யூகங்களை வெளியிட வேண்டாம் என குமார் அறிவுறுத்தியுள்ளார்.

கிளந்தான், கோத்தா பாருவில் நடைபெற்ற பாஸ் கட்சியின் 72-ஆவது பொதுப் பேரவையில் பேசிய ஹாடி அவாங், 2014-ஆம் ஆண்டு பாரிசான் நேஷனல் தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்க்க அமெரிக்கத் தூதரகப் பிரதிநிதி ஒருவர் தங்களுக்கு உதவ முன்வந்ததாகக் குற்றம் சாட்டினார்.

மேலும், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மலேசிய வருகையின் போது, பிரதமர் பதவிக்கு பாஸ் கட்சியின் தேர்வு யார் என்பதனை அந்தப் பிரதிநிதி கேட்டறிந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இப்பேச்சு அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்கத் தூதரகம் இக்குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!