ஜோர்ஜ்டவுன், நவம்பர்-18, பினாங்கு, தாசேக் குளுகோரில் கைகலப்பின் போது வெளிநாட்டு ஆடவரால் தோண்டியெடுக்கப்பட்ட உள்ளூர் ஆடவரின் இடது கண் விழியை இனியும் காப்பாற்ற முடியாது.
52 வயது அவ்வாடவரது இடது கண் நிரந்தர செயலிழப்புக்கு ஆளாகலாமென போலீஸ் கூறியுள்ளது.
பாதிக்கப்பட்டவர் தற்சமயம் பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அஹ்மாட் (Datuk Hamzah Ahmad) தெரிவித்தார்.
சம்பவத்தின் போது அவர் மதுபோதையிலிருந்தார்; அவருக்குப் பழையக் குற்றப்பதிவுகளும் உள்ளன.
தாசேக் குளுகோர், ரத்தினா அடுக்குமாடி குடியிருப்பில் அண்டை வீட்டுக்காரர்களான அவ்விருவருக்கும், தவறான புரிந்துணர்வு ஏற்பட்டு சண்டை மூண்டதாகத் தெரிகிறது.
கண்ணைத் தோண்டி வெளியில் எடுத்த 28 வயது வெளிநாட்டு ஆடவன் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.