ஜோர்ஜ்டவுன், டிசம்பர்-16 – பட்டவொர்த்திலும், ஜோர்ஜ்டவுனிலும் 6 சந்தேக நபர்கள் கைதாகியிருப்பதை அடுத்து, ஒரு பெரிய போதைப்பொருள் விநியோக கும்பலை பினாங்கு போலீஸ் முறியடித்துள்ளது.
டிசம்பர் 6-ம் மற்றும் 13-ம் தேதிகளில் கைதான அந்த அறுவரில் இருவர் பெண்களாவர்.
அவர்களிடமிருந்து சுமார் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு வகைப் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இவ்வாண்டு தொடக்கம் மோதலே செயல்பட்டு வரும் அக்கும்பல், அனைத்துலகப் போதைப்பொருள் கட்டமைப்பிலிருந்து கையிருப்புகளைப் பெற்றுக் கொண்டு, உள்ளூர் சந்தையில் குறிப்பாக பினாங்கு சுற்று வட்டாரத்திலுள்ள கேளிக்கை மையங்களுக்கு அவற்றை விற்று வந்துள்ளது.
இந்த அறுவரின் கைதோடு, 755, 500 ரிங்கிட் மதிப்பிலான 9 வாகனங்களும், 26,085 ரிங்கிட் ரொக்கமும், 800 ரிங்கிட் மதிப்பிலான நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
64,703.49 ரிங்கிட் பணத்தைக் கொண்ட 4 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டதாக, பினாங்கு போலீஸ் துணைத் தலைவர் Mohd Alwi Zainal Abidin கூறினார்.
கைதான அனைவரும் விசாரணைக்காக டிசம்பர் 20 வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.