
பட்டர்வொர்த், ஆகஸ்ட்-25-பினாங்கு பால டோல் சாவடியில் கார்கள் செல்லும் பாதையை மோட்டார் சைக்கிளோட்டிகள் சிலர் பயன்படுத்திய சம்பவம் தொடர்பான காணொளி இணையவாசிகள் மத்தியில் கடும் அதிருப்தியைத் தூண்டியுள்ளது.
மோட்டார் சைக்கிளோட்டிகள் சிலர் மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கென ஒதுக்கப்பட்ட பாதையில் செல்லாமல் கார்களுக்கான பாதையைப் பயன்படுத்தும் அக்காணொளி பினாங்கு கினி ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டிருந்தது. அச்சம்பவம் எப்போது நிகழ்ந்தது என்பது தெரியவில்லை.
அது குறித்து வலைத்தளவாசிகள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குற்றம் நிகழ்ந்திருந்தால் நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் சம்பந்தப்பட்ட தரப்புகளைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சிசிடிவி காட்சிகள் மூலம் மோட்டார் சைக்கிளோட்டிகளை அடையாளம் கண்டு அபராதம் விதிக்குமாறு Anura Mnoor எனும் சமூக ஊடகப் பயனர் காவல்துறை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறையைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள் பாதையில் ஒருவேளை சாலைத் தடுப்பு நடவடிக்கை இருந்திருக்கலாம். அதன் காரணமாக மோட்டார் சைக்கிளோட்டிகள் கார் பாதையைப் பயன்படுத்தியிருக்கலாம் என Shahrom Nizam Jelmol கூறியிருக்கிறார்.
மோட்டார் சைக்கிள் பாதைகளில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட சட்ட அமலாக்க நடவடிக்கைகளால் அந்த மோட்டார் சைக்கிளோட்டிகள் அப்பாதையைத் தவிர்த்திருக்கலாம் என Zainol Zaki Zaini என்பவர் கருத்து தெரிவித்துள்ளார்.



