
கோலாலம்பூர், அக்-19-வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சு (KPKT), 2023ஆம் ஆண்டு முதல் 2026 ஆகஸ்ட் வரை பிரச்சனையுடைய மொத்தம் 1,726 தனியார் வீட்டுவசதித் திட்டங்களை வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளது. அதன் மூலம் 199,643 வீடுகள் மீட்கப்பட்டன. அத்திட்டங்களின் மொத்த மேம்பாட்டு மதிப்பு 158.16 பில்லியன் ரிங்கிட் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரச்சனை கொண்ட மற்றும் கைவிடப்பட்ட தனியார் வீட்டுவசதித் திட்டங்களுக்கான பணிக்குழுவின் (TFST) ஒருங்கிணைந்த நடவடிக்கைகளே அவ்வெற்றிக்குக் காரணம் என வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை துணை அமைச்சர் Datuk Hajah Aiman Athirah binti Sabu தெரிவித்தார். மீட்கப்பட்ட திட்டங்களில், இதற்கு முன் பிரச்சனை உள்ளவை என வகைப்படுத்தப்பட்ட 147 திட்டங்களின் அமலாக்கம் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. அது 29,900 வீடுகளை உட்படுத்தியிருக்கிறது. மேலும், 1,542 தாமதமான திட்டங்கள் நிறைவடைந்து, முழுமை மற்றும் இணக்கச் சான்றிதழைப் (CCC) பெற்றுள்ளன. அவை 163,621 வீடுகளைக் கொண்டுள்ளன.


இதனிடையே, கைவிடப்பட்ட 37 வீட்டுத் திட்டங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 6,122 வீடுகள் அடங்குகின்றன. தீபகற்ப மலேசியாவில், ஆகஸ்ட் 31ஆம் தேதி நிலவரப்படி, 128 திட்டங்கள் தாமதமானவையாகவும், 278 திட்டங்கள் பிரச்சனை உள்ளவையாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 99 உரிமம் பெற்ற வீட்டுத் திட்டங்களும் 163 உரிமம் பெறாத திட்டங்களும் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


பிரச்சனையுடைய திட்டங்களின் முன்னேற்றத்தை நேரடியாகக் கண்காணிக்கும் வகையில், 2026 ஆகஸ்ட் வரை 33 கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக Aiman Athirah கூறினார். அந்நடவடிக்கைகளைத் தொடர்ந்து, ஆய்வு செய்யப்பட்ட திட்டங்களில் 23 திட்டங்கள் முழுமை மற்றும் இணக்கச் சான்றிதழைப் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றான கோம்பாக்கில் உள்ள Residensi Hektar Gombak திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 92.67 விழுக்காடு நிறைவடைந்துள்ளன. அத்திட்டம் 2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் முழுமையடையும். இரண்டாம் காலாண்டில் வீடுகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




