கோலாலம்பூர், அக்டோபர்-26,
PAR எனப்படும் மக்கள் புகார் சங்கம் ஏற்பாட்டில் கோலாலம்பூர் பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் நாளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 2 நாட்களுக்கு Fiesta Muzikal Dan Kesenian Deepavali எனும் தீபாவளி கலையிரவு நடைபெறுகிறது.
Central Suite முன்புறமுள்ள ஜாலான் துன் சம்பந்தன் சாலையில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை அந்த மேடை இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
அக்டோபர் 28, 29, 30 என 3 நாட்களுக்கு நடைபெற திட்டமிடப்பட்டிருந்த அந்நிகழ்ச்சி, தவிர்க்க முடியாத சில காரணங்களால் முன்கூட்டியே நடைபெறுவதாக, இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் PAR தலைவர் டத்தோ சந்திரகுமணன் தெரிவித்தார்.
இலக்கயியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ சிறப்பு விருந்தினராக அதில் கலந்துகொள்ளவிருக்கிறார்.
கலைநிகழ்ச்சியோடு, வசதி குறைந்த 500 பேருக்கு நிதி அன்பளிப்பும், 200 மாணவர்களுக்கு தலா 250 ரிங்கிட் மதிப்பிலான பற்றுச் சீட்டுகளும், வருகையாளர்களுக்கு goodie bags எனும் பரிசுப் பைகளும் வழங்கப்படுகின்றன.
இதற்கு முன் பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் மேடை அமைத்து நிகழ்ச்சி நடத்தக் கூடாதென தீபாவளிச் சந்தை வியாபாரிகள் போர்க்கொடி தூக்கியிருந்த நிலையில், தற்போது அவ்விவகாரம் பேசி தீர்க்கப்பட்டுள்ளது.
கலைநிகழ்ச்சிகளை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதால், இந்த Fiesta Muzikal தீபாவளி கலையிரவு களைக்கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் கலைஞர்களின் இசைப் படைப்புகளை கண்டு களிப்பதோடு தீபாவளி கொண்டாட்டத்தை மேலும் சிறப்பிக்குமாறு டத்தோ சந்திரகுமணன் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.