
கோலாலம்பூர், ஆகஸ்ட் 27 – நாட்டின் பல பகுதிகளில் புகைமூட்டம் நிலவி வரும் நிலையில், கடந்த தொற்றுநோயியல் வாரத்தில் மேல் சுவாசக் குழாய் தொற்றான URTI மற்றும் ஆஸ்துமா பாதிப்புகள் கடுமையாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
URTI பாதிப்புகள் 32ஆவது வாரத்தில் 1,637 ஆக இருந்த நிலையில், 33ஆவது வாரத்தில் 3,674 ஆக உயர்ந்து 124.4 விழுக்காடு அதிகரித்துள்ளன. அதேபோல், ஆஸ்துமா பாதிப்புகள் 61இல் இருந்து 219 ஆக உயர்ந்து 259 விழுக்காடு அதிகரித்துள்ளன. கண் அழற்சி பாதிப்புகள் மட்டும் 157இல் இருந்து 146 ஆக சற்று குறைந்துள்ளன.
ஆகஸ்ட் 25ஆம் தேதி 31 பகுதிகளில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் இருந்ததையடுத்து இன்று காலை 8 மணியளவில் அது 17 பகுதிகளாகக் குறைந்துள்ளது. எனினும், சரவாக்கின் சில பகுதிகளில் புகைமூட்டம் தொடர்ந்து காணப்படுகிறது.
காலை 10.45 மணி நிலவரத்தின்படி, சரவாக்கின் சமரஹான், செரியான், ஸ்ரீ அமான், கோலாலம்பூரின் செராஸ் மற்றும் சிலாங்கூரின் ஜொஹான் செத்தியா ஆகிய 5 பகுதிகளில் மட்டுமே காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.
புகைமூட்டத்தால் ஏற்படும் நோய்களின் தாக்கத்தை சுகாதார அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.



