
ஜோர்ஜ்டவுன்,மார்ச்-5-பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு வெளியே உள்ள ஒரு சிறிய இந்து கோவிலுக்கு எதிராக வரும் சனிக்கிழமை போராட்டம் நடத்துவதில், Surplus எனப்படும் பினாங்கு Surplus நலன் அமைப்பு உறுதியாக உள்ளது.
இந்த போராட்டத்தை இரத்துச் செய்யுமாறு போலீஸார் அறிவுறுத்தியுள்ள போதிலும், முடிவிலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என அதன் தலைவர் Sophian Mohd Zain திட்டவட்டமாகக் கூறினார்.
”நில அபகரிப்பு பிரச்னையில் எந்த சமரசமும் இல்லை” என ஃபேஸ்புக் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
போராட்டம் மருத்துவமனைக்கு அருகில் நடைபெறுவதால், நோயாளிகள் மற்றும் சுகாதார சேவைகளுக்கு இடையூறு ஏற்படும் அபாயம் குறித்து மாநில போலீஸ் கவலை தெரிவித்துள்ளது.
அனுமதியின்றி கூட்டம் நடத்தப்பட்டால், பங்கேற்பாளர்கள் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தை நடத்த வேண்டாமென, புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினரும், தொழில் முனைவோர்- கூட்டுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான ஸ்டீவன் சிங்கும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்த உத்தேச ஆர்ப்பாட்டத்திற்கு முதலில் ஃபேஸ்புக் வாயிலாக சர்ச்சைக்குரிய சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் அழைப்பு விடுத்த நிலையில், அவருக்கெதிராக ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் போலீஸில் புகார் செய்தது குறிப்பிடத்தக்கது.



