
பெட்டாலிங் ஜெயா, மே-17 – நாட்டின் அரசியல் களத்தில் புதிய திருப்பமாக, பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி மற்றும் செத்தியாவங்சா நாடாளுமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் இருவரும் Parti Bersama Malaysia கட்சியை அதிகாரப்பூர்வமாகக் கைப்பற்றியுள்ளனர்.
பெட்டாலிங் ஜெயாவில் இன்று நடைபெற்ற நிகழ்வில், அந்த கட்சியின் நிறுவனத் தலைவர் Tan Gin Theam, கட்சியின் பதிவுச் சான்றிதழை ரஃபிசி மற்றும் நிக் நஸ்மியிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார்.
கடந்தாண்டு மே மாதம் பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் முக்கியப் பதவிகளைத் தக்கவைக்கத் தவறியதைத் தொடர்ந்து, இவ்விருவரும் தங்களின் அமைச்சர் பதவிகளைத் துறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பி.கே.ஆர் கட்சிக்கு வெளியிலிருந்து சீர்திருத்தக் கருத்துக்களை முன்னெடுப்பதற்காகப் புதிய அரசியல் தளத்தை உருவாக்கப் போவதாக ரஃபிசி கடந்த ஏப்ரல் மாதம் குறிப்பிட்டிருந்தார்.
அதன் தொடர்ச்சியாகவே, தற்போது இந்த கட்சியை அவர்கள் தங்களின் புதிய அரசியல் நுழைவாயிலாகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இக்கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் மறுசீரமைப்பு குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பி.கே.ஆரில் இருந்துகொண்டே புதுக் கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருப்பதால், ரஃபிசி, நிக் நஸ்மி இருவர் மீது கட்டொழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது.
Parti Bersama Malaysia) அல்லது Parti MU முதன்முதலில் 2016 டிசம்பர் 2 அன்று பினாங்கில் பதிவுச் செய்யப்பட்டது.
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பிற்குமே ஒரு நல்வழிகாட்டியாகவும், சமநிலையைச் உறுதி செய்யும் ஒரு ‘மூன்றாவது சக்தியாகவும்’ செயல்படுவதற்காக இந்தக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது.



