Latestமலேசியா

மலேசியா–இந்தியா தற்காப்பு உறவு மேலும் வலுப்படும்: இணையப் பாதுகாப்பு, இராணுவ தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பு விரிவு

புது டெல்லி, ஜூலை-2 – மலேசியா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான தற்காப்பு உறவுகளை, இணையப் பாதுகாப்பு மற்றும் தற்காப்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட புதியத் துறைகளில் மேலும் விரிவுபடுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

புது டெல்லியில் நேற்று நடைபெற்ற இராணுவ ஒத்துழைப்புக்கான 12-ஆவது இந்தியா-மலேசியா துணைக் குழுவின் கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எட்டப்பட்டன.

இக்கூட்டத்திற்கு மலேசிய ஆயுதப்படையின் மேஜர் ஜெனரல் Mahmud Bin Abdul Rahman மற்றும் இந்தியத் தற்காப்பு அமைச்சின் இணைச் செயலாளர் ஸ்ரீ Amitabh Prasadஆகியோர் கூட்டுத் தலைமை வகித்தனர்.

இரு நாடுகளுக்கும் இடையே தற்போது நிலவி வரும் இராணுவ உறவுகள் குறித்து திருப்தி வெளியிட்ட இரு தரப்பும், கூட்டுப் பயிற்சிகள், மனிதநேய உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகள் ஆகியவற்றில் தங்களின் கூட்டுறவை மேலும் பலப்படுத்த உறுதியளித்தன.

இதன் ஒரு பகுதியாக, இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையிலான 11-ஆவது அதிகாரத்துவப் பேச்சுவார்த்தையும் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

அரச மலேசியக் கடற்படையின் தற்காப்பு உதவித் தலைவர் ரியர் அட்மிரல் டத்தோ Pahlawan Mohd Fadzli Kamal bin Mohd Mohaldin மற்றும் இந்தியாவின் ரியர் அட்மிரல் ஸ்ரீநிவாஸ் மடுலா (Srinivas Maddula) ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இந்தியப் பெருங்கடல் வட்டாரத்தில் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இப்பயணத்தின் போது, மலேசிய தூதுக்குழுவினர் இந்தியாவின் தேசிய போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து வீரமரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, இந்தியாவின் தற்காப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங்கையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!