
ஹனோய் – ஜூலை-20 – வியட்நாமில் புயல் காற்றின் போது சுற்றுலா படகுக் கவிழ்ந்ததில், 8 குழந்தைகள் உட்பட 27 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
13 பேரை இன்னும் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது Wonder Sea எனும் படகு 48 பயணிகளையும், 5 பணியாளர்களையும் ஏற்றிக் கொண்டு பிரபல சுற்றுலாத்தலமான Ha Long விரிகுடா சென்றது.
பயணிகளில் சுமார் 20 பேர் சிறார்கள் ஆவர். அப்போது மோசமான புயல் காற்று வீசியதில் நிலைத் தடுமாறி படகுக் கடலில் கவிழ்ந்தது. சம்பவ இடம் விரைந்த மீட்புக் குழுவினர் 11 பேரைக் காப்பாற்றினர்.
அவர்களில், கவிழ்ந்த படகில் 4 மணி நேரங்களாக சிக்கிக் கொண்ட 14 வயது பையனும் அடங்குவான்.
27 பேரது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களைத் தேடி மீட்கும் பணிகள் தீவீரப்படுத்தப்பட்டுள்ளன.
அடுத்த வாரம் Wipha வெப்ப மண்டல சூறாவளி Ha Long விரிகுடா உட்பட வியட்நாமின் வட பகுதிகளைத் தாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.