
பூச்சோங், ஏப்ரல்-8,
போலீஸாரும் சுகாதார அதிகாரிகளும் ஆள்மாறாட்டம் செய்து மேற்கொண்ட சோதனையில், சிலாங்கூர் பூச்சோங்கில் போலி பெண் மருத்துவர் ஒருவர் கையும் களவுமாகப் பிடிபட்டார்.
தாமான் பூச்சோங் பிரிமாவில் ஒரு கடையில் நீண்ட காலமாகவே 20 வயது மதிக்கத்தக்க அந்த உள்ளூர் பெண், தன்னை நாடி வரும் நோயாளிகளுக்கு ‘பல் மருத்துவம்’ பார்த்து வந்துள்ளார்.
அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவும் நோக்கில் தனது கடையை, உடலில் துளையிட்டு தோடு, வளையம் போன்ற அணிகலன்களை மாட்டும் சேவை மற்றும் கண்ணிமை நீட்டிப்பு சேவை மையம் என பதிவுச் செய்துள்ளார்.
ஆனால் உள்ளே நடப்பதோ சட்டவிரோத பல் மருத்துவச் சேவை.
2018 பல் மருத்துவச் சட்டத்தின் கீழ் முறையாகப் பதிவுப் பெறாமல் பல் மருத்துவம் நடப்பதாக பொது மக்கள் கொடுத்த புகாரை அடுத்து இந்த அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது.
அதிகாரிகள் உள்ளே நுழைந்த போது அப்பெண், ஒரு பெண் நோயாளிக்கு மும்முரமாக ‘பல் மருத்துவம்’ பார்த்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தான் உண்மையிலேயே சான்றிதழ் பெற்ற பல் மருத்துவர் என சுற்று வட்டார மக்களை நம்ப வைப்பதற்காக, பல் சிகிச்சைக்கான கருவிகளையும் உபகரணங்களையும் கனக்கச்சிதமாகக் அவர் பயன்படுத்தியுள்ளார்.
இதனால், குறைந்த விலையில் அவரின் ‘சிகிச்சையை’ நாடி செல்வோருக்கும் சந்தேகம் வருவதில்லை.
அதிகாரிகள் கேட்ட போது, சுகாதார அமைச்சின் கீழ் தனியார் பல் மருத்துவ கிளினிக்காக பதிவுச் செய்த சான்றிதழ் எதனையும் அவரால் காட்ட முடியவில்லை.
இதையடுத்து அந்த சட்டவிரோத நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு, போலீஸிலும் புகார் செய்யப்பட்டது.