
பெய்ஜிங், மே-17-அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப்பின் சீனப் சுற்றுப்பயணம், அரசியல் விவாதங்களைத் தாண்டி சமூக வலைத்தளங்களில் பெரும் வேடிக்கை கலந்த விவாதங்களை கிளப்பியுள்ளது.
குறிப்பாக, இரு தலைவர்களும் அமர்ந்திருந்த சோஃபாக்களின் வடிவமைப்பு இணையவாசிகளின் பார்வையில் சிக்கியுள்ளது.
சீன அதிபர் சீ சின்பிங் அமர்ந்திருந்த சோஃபா, ட்ரம்ப்பின் சோபாவை விட சற்று உயரமாக வடிவமைக்கப்பட்டிருந்ததாக சமூக ஊடகங்களில் வலைத்தளவாசிகள் மீம்ஸ்களைப் பறக்கவிட்டு, “இதிலும் சீன ராஜதந்திரமா?” என கிண்டல் செய்து வருகின்றனர்.
இதனிடையே, மற்றொரு வீடியோவில் அதிபர் ட்ரம்ப், அருகில் அமர்ந்திருந்த சீ சின்பிங்கின் தனிப்பட்ட குறிப்பேட்டை இரகசியமாக எட்டிப் பார்ப்பது போன்ற காட்சிகள் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதை வைத்தும் இணையத்தில் ட்ரம்ப் கிண்டலிக்கப்பட்டார்.
ஆனால், உண்மையில், அது சீ சின்பிங்கின் குறிப்பேடு அல்ல; மாறாக ட்ரம்ப்புக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ சின்னம் பொறிக்கப்பட்ட கோப்பாகும்.
சீ சின்பிங் மேடைக்கு உரையாற்றச் சென்றபோது, ட்ரம்ப் தனது கோப்பில் இருந்த உரை குறிப்புகளைச் சரிபார்த்துக் கொண்டிருந்த வீடியோவே, தவறான புரிதலுடன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தொட்டதெல்லாம் துலங்கும் என்பார்கள்… ஆனால், ட்ரம்ப் எதைச் செய்தாலும் எதைப் பேசினாலும் அது சர்ச்சையாகவோ அல்லது மீம்ஸ் உருவாக்குநர்களுக்குத் தீனிப் போடும் வகையிலோ அமைந்து விடுவது வாடிக்கையாகி விட்டது.



