
கோலாலம்பூர், அக்டோபர்-3,தமது 12 வயது மகன், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் தலைமையகத்திற்குச் செல்ல நேரிட்டது குறித்து, ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக MACC தலைமை ஆணையர் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலிம் அமான் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், சொத்து அறிவிப்பு நோட்டீஸைப் பெற தனது மகனும் நேரில் வர வேண்டும் என்ற புரிதல் தமது குடும்பத்திற்கு ஏற்பட்டதாக முன்னாள் மனிதவள அமைச்சருமான சரவணன் கூறினார்.
MACC தலைமையகத்திற்குச் சென்ற பின்னரே, தனது மகன் எந்த ஆவணத்திலும் கையெழுத்திடத் தேவையில்லை என்றும், அவர் வீடு திரும்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டதாக சரவணன் கூறினார்.
தனது மகன் சிறுவன் என்பதையும், அவரது பெயரில் சொத்துகள் இல்லை என்பதையும் ஏற்கனவே அதிகாரிகளிடம் தெரிவித்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், 12 வயது சிறுவனுக்கு எந்தவொரு சொத்து அறிவிப்பு நோட்டீஸும் வழங்கப்படவில்லை என்று MACC விளக்கமளித்துள்ளது.
அந்தச் சிறுவன் தனது பெற்றோருடன் மட்டுமே தலைமையகத்திற்கு வந்ததாகவும், அவருக்கு நோட்டீஸ் வழங்க வேண்டாம் என விவேகத்தின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டதாகவும் MACC தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



