
வாஷிங்டன், மே-14-உலக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் சீ சின்பிங் இன்று பெய்ஜிங்கில் சந்தித்துப் பேசினர்.
சீனாவின் Great Hall of the People வளாகத்தில் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஒருவர் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை.
இந்தப் பேச்சுவார்த்தையில் ஈரான் விவகாரம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
மத்தியக் கிழக்கில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க சீனாவின் ஒத்துழைப்பை அமெரிக்கா கோருமா என்பதே இப்போதைய கேள்வி.
அதேசமயம், அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோவும் இந்த உயர்மட்டக் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
பொருளாதார ரீதியாக, கடந்தாண்டு 100 விழுக்காட்டுக்கும் மேலாக உயர்ந்த வர்த்தக வரிகளை குறைப்பது குறித்து இரு தலைவர்களும் விவாதிக்கவுள்ளனர்.
இலோன் மாஸ்க் மற்றும் ஜென்சன் ஹுவாங் (Jensen Huang) போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்களும் ட்ரம்புடன் இணைந்துள்ளது வர்த்தக முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
தைவான் விவகாரம் மற்றும் AI தொழில்நுட்பப் போட்டி எனப் பல சிக்கலான விவகாரங்கள் மேசையில் இருக்கும் நிலையில், இந்தச் சந்திப்பு உலகப் பொருளாதாரத்தில் ஒரு நிலைத்தன்மையை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



