
பாலேக் பூலாவ், ஜனவரி-13 – 2 போலி துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றத்தை, பினாங்கு, பாலேக் பூலாவ் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆடவர் ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை பாயான் லெப்பாஸ், சுங்கை ஆராவில் உள்ள ஒரு வீட்டில் அக்குற்றத்தைப் புரிந்ததாக, 6 பிள்ளைகளுக்குத் தந்தையான 47 வயது Mohd Nasir Othman குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
‘Combact Machine Cal 7-8MM water bullet’ மற்றும் ‘Property Of US Govt M4AI Carbone Cal 5.56MM’ என எழுதப்பட்டிருந்த 2 போலி துப்பாக்கிகளை முறையான உரிமம் இன்றி வைத்திருந்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
11 வயது மகனுடன் விளையாடுவதற்காக டிக் டோக்கில் அவற்றை வாங்கியதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 1960-ஆம் ஆண்டு ஆயுதச் சட்டத்தின் கீழ் அதிகபட்சம் ஓராண்டு சிறைத்தண்டனை மற்றும் 5,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம்.
எனினும், நீதிபதி 1,800 ரிங்கிட் அபராதமும், தவறினால் 1 மாத சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.