
புத்ராஜெயா, ஜனவரி-15 – இன்று பொங்கல் கொண்டாடும் மலேசிய இந்தியச் சமூகத்தினருக்கும், அனைத்து மலேசியர்களுக்கும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
பொங்கல் என்பது நன்றி கூறும் அறுவடை விழா மட்டுமல்ல; அது நம்மை ஒன்றிணைக்கும் மதிப்புகளின் நினைவூட்டல் என்றார் அவர்.
மலேசியாவின் உண்மையான வலிமை மக்களின் பன்முகத்தன்மையிலும், ஒருவருக்கொருவர் காட்டும் மரியாதையிலும் உள்ளது.
பரஸ்பர புரிதலும் ஒற்றுமையும் தான் இந்த தேசத்தின் அடித்தளம்.
எனவே, பொங்கல் பானையைச் சுற்றி குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் கூடுவது போல, மலேசியர்கள் அனைவரும் மனதால் ஒன்றிணைந்து, வேறுபாடுகளை களைந்து, பாரம்பரியங்களை கொண்டாடி, சமூகங்களுக்கிடையே பாலங்களை அமைக்க வேண்டும்.
ஒவ்வொரு மலேசியரும் மரியாதையை நிலைநிறுத்தி, அமைதியை வளர்த்து, ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்.
இந்த பொங்கல் நம்மை வளமும் நம்பிக்கையும் நிறைந்த எதிர்காலத்திற்காக கை கோர்த்து முன்னேற ஊக்குவிக்கட்டும் என, தமது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் அன்வார் குறிப்பிட்டார்.



