
மலாக்கா, செப்டம்பர் 6 – மலாக்கா, ஆயர் கெரோ நீதிமன்றத்தில் 32 வயது ஆடவன் தனது காதலியை மரக்கட்டையால் தாக்கி காயப்படுத்திய வழக்கில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் மறுத்துள்ளான்.
கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் பத்து பெரெண்டாம், ஜெலுத்தோங் இந்திய மயானத்திலுள்ள சடலம் எரிக்கும் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட ஆடவன் தனது காதலியை அங்கு அழைத்துச் சென்று, மரக்கட்டையால் அவரது உடல் மற்றும் வலது கையில் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பெண்ணுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதுடன், 30 நாட்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது.
சந்தேக ஆடவன் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.
நீதிமன்றம் ஒரு உத்தரவாத நபருடன் 8,000 ரிங்கிட் பிணை வழங்கி, சாட்சிகளைத் தொடர்புகொண்டு தொந்தரவு செய்யக்கூடாது என்றும், வழக்கு முடியும் வரை மாதந்தோறும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த வழக்கு மீண்டும் அக்டோபர் 6ஆம் தேதி விசாரணைக்கு உட்படவுள்ளது.



