
செப்பாங், மார்ச்-22 – மலேசிய ஏர்லைன்ஸ், ஃபயர்ஃபிளை மற்றும் MASwings விமானப் பயணிகள் ஏப்ரல் 1 முதல் விமானப் பயணங்களின் போது தங்களுடனேயே power bank கருவிகளை வைத்திருக்க வேண்டும்.
எனினும் அவற்றைப் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக மலேசிய ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட புதிய வழிகாட்டுதல்களின் கீழ், power bank-குகளை தலைக்கு மேலுள்ள பெட்டிகளில் வைக்கக்கூடாது; ஆனால் கையில் எடுத்துச் செல்லும் பையினுள் வைத்து இருக்கைக்கு அடியிலோ அல்லது இருக்கை பாக்கெட்டிலோ வைக்கலாம்.
அதே சமயம், தற்செயலான செயல்பாட்டைத் தடுக்க, காந்த வயர்லெஸ் சார்ஜிங் power bank-குகளை ஒரு தனி பை அல்லது பாதுகாப்பு பையில் வைத்திருக்க வேண்டும் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
நடுவானில் power bank-குகளை சார்ஜ் செய்வதும் தடைச் செய்யப்பட்டுள்ளது.
தவிர, சரிபார்க்கப்பட்ட பயணப் பெட்டிகளிலும் power bank மற்றும் உதிரி லித்தியம்-அயன் பேட்டரிகள் கண்டிப்பாக தடைச் செய்யப்படுகின்றன.
விமானப் பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்தும் முயற்சியிலேயே, விதிமுறைகளை புதுப்பித்திருப்பதாக மலேசிய ஏர்லைன்ஸ் விளக்கியது.
பாத்திக் ஏர் உட்பட இவ்வட்டாரத்தைச் சேர்ந்த சில முக்கிய விமான நிறுவனங்கள் power bank தொடர்பான தத்தம் வழிகாட்டுதல்களை அண்மையில் புதுப்பித்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடுவானில் பாத்திக் ஏர் விமானத்தின் மேல்நிலைப் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டு, புகை சூழ்ந்த சம்பவம் வைரலானது.