புத்ராஜெயா, செப்டம்பர் 4 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வழியாக வெளிநாட்டினர்களைக் கடத்திய கும்பலுடன் தொடர்புடைய ஊழல் விசாரணையில் சிக்கியதாகக் கூறப்படும் குடிநுழைவுத் துறை அதிகாரி ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், தேடி வருகிறது.
ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிரடி நடவடிக்கையின் போது பல அமலாக்க அதிகாரிகள் உட்பட 12 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், குறிப்பிட்ட அந்த அதிகாரி மட்டும் தப்பித்து ஓட்டம் பிடித்தான்.
சம்பந்தப்பட்ட அதிகாரி உயர் பதிவியில் இல்லை என்றாலும், விமான நிலையத்தில் மற்ற பணியாளர்கள் மீது அவருக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருந்துள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி கூறினார்.
இதனிடையே, விசாரணையில் தற்போது சிக்கியுள்ள குடிநுழைவுத் துறை அதிகாரிகளுக்குச் சொந்தமான சொகுசு வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 29ஆம் திகதி அன்று, KLIA வழியாக வெளிநாட்டினரை நாட்டிற்கு கடத்தும் கும்பலுடன் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இதர 46 அமலாக்க அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
முறையான ஆய்வு இல்லாமல் குறிப்பிட்ட கவுண்டர்கள் வழி வெளிநாட்டினரை அனுமதிக்கின்ற ‘counter setting’ மூலம் இந்த மோசடிகள் நடைபெற்று வந்துள்ளன.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில், இந்த அதிகாரிகள் லஞ்சம் மற்றும் பிற முகவர்களுடன் கூட்டு சேர்ந்து, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நுழைவதற்கும், முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக வேலை செய்வதற்கு உதவியது தெரியவந்துள்ளது.