ஷா ஆலாம், அக்டோபர்-11, ஐந்தாண்டுகளுக்கு முன்னர் தலையில் இரத்தம் வடிந்து 5 தையல்கள் போடும் அளவுக்கு மாணவனை துடைப்பத்தால் அடித்த ஆசிரியை, தற்போது 13 வயதாகியுள்ள அப்பையனுக்கு இழப்பீடாக 85,000 ரிங்கிட்டை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளார்.
ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் இன்று அத்தீர்ப்பை வழங்கியது.
தற்போது 60 வயதாகி ஓய்வுப் பெற்று விட்ட அந்த ஆசிரியைக்கு எதிராக அப்பையனின் சார்பில் அவனது தந்தை தொடர்ந்த வழக்கை செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றம் முன்னதாக தள்ளுபடி செய்திருந்தது.
அதனை எதிர்த்து அவர்கள் செய்த மேல்முறையீட்டை ஏற்றுக் கொண்டு, உயர் நீதிமன்றம் இன்று அந்த இழப்பீட்டுத் தொகையை நிர்ணயித்தது.
என்றாலும், அவ்வழக்கில் இரண்டாவது பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டிருந்த பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் மூன்றாவது பிரதிவாதியான மலேசிய அரசாங்கத்துக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்த செஷன்ஸ் நீதிமன்றத்தின் முடிவு நிலை நிறுத்தப்பட்டது.
கட்டளைப் பின்பற்றப்படுவதை உறுதிச் செய்ய, துடைப்பத்தை கொண்டு மாணவர்களை பயமுறுத்தும் காலமெல்லாம் மலையேறி விட்டது.
தற்காலத்திற்கு அது சற்றும் பொருந்தாத ஒன்று என நீதிபதி சுட்டிக் காட்டினார்.
2019-ஆம் ஆண்டு அக்டோபர் 18-ஆம் தேதி, சிலாங்கூர், செலாயாங்கில் உள்ள தேசியப் பள்ளியொன்றில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.