
கோலாலம்பூர், செப்டம்பர்-5 – சிறார் மற்றும் குழந்தைகளின் ஆபாச படங்களையும் வீடியோக்களையும் விற்று வந்து அண்மையில் முறியடிக்கப்பட்ட ஒரு கும்பலுக்கு, அனைத்துலகத் தொடர்புகள் இருப்பதாக புக்கிட் அமான் சந்தேகிக்கிறது.
அக்கும்பல் இணையத்தில் ‘dark web’ தளங்கள் வழியாக அந்நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது குறித்து வெளிநாட்டு அதிகாரிகளிடமிருந்தும் தகவல் கிடைத்ததாக, புக்கிட் அமான்
குற்றப்புலனாய்வு துறை இயக்குநர் டத்தோ எம்.குமார் கூறினார்.
ஒரு மாதத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட ‘Op Pedo’ சிறப்பு சோதனை நடவடிக்கையில் இதுவரை 11 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
ஜோகூர் பாருவில் கைதான கும்பலின் தலைவனும் அதிலடங்குவான்.
சிறார் மீது பாலுணர்வு நாட்டம் கொண்ட 29 வயது அவ்வாடவன், ஃபேஸ்புக் மூலம் தாய்மார்களிடம் 1,500 முதல் 3,500 ரிங்கிட் வரை கொடுத்து குழந்தைகளைப் பெற்றதாகவும், பிறப்புச் சான்றிதழ் பெற்று சட்டபூர்வமாகத் தத்தெடுத்த பிறகு அவர்களை துஷ்பிரயோகம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
சிறார்களைக் கட்டாயப்படுத்தி அவர்களுடன் பாலியல் நடவடிக்கைகளில் அவன் ஈடுபட்டு, அவற்றை வீடியோக்களில் பதிவுச் செய்து இணையத்தில் விற்று காசு பார்த்து வந்துள்ளான்.
அப்படி பாதிக்கப்பட்ட இரு குழந்தைகள் மற்றும் 5 முதல் 7 வயது வரையிலான 3 சிறுமிகள் மீட்கப்பட்டு சமூக நலத்துறை பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக குமார் தெரிவித்தார்.
2017 சிறார் பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் சந்தேக நபர் விசாரிக்கப்படுகிறான்.