
கோலாலம்பூர், செப்-18-பேராக் மாநிலத்தில் மெனோரா சுரங்கப்பாதை–கோலா கங்சார் இடையிலான வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் இன்று காலை லாரி ஒன்று தடம் புரண்டதை அடுத்து, வடக்கு நோக்கிய அனைத்து பாதைகளிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அச்சம்பவம் 257.7ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது. அதனால் சுமார் 1.7 கிலோமீட்டர் தூரத்துக்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியம் LLM தெரிவித்துள்ளது. ஆகவே அப்பாதையைப் பயன்படுத்தும் வாகனமோட்டிகள் அது குறித்து விழிப்புடனும் கவனமாகவும் இருக்குமாறு அது ஆலோசனை கூறியது.
இவ்வேளையில், அச்சம்பவம் காரணமாக போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளதாக வாகனமோட்டிகள் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளனர். லாரி சாலையின் குறுக்கே கிடப்பதால், சுரங்கப்பாதை வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் அதிருப்தி வெளியிட்டிருந்தனர்.
வடக்கு நோக்கிச் செல்லும் வாகனமோட்டிகள் மாற்றுப் பாதையாக Sungai Siput வழியைப் பயன்படுத்தலாம் என அவர்கள் பிற வாகனமோட்டிகளுக்கு ஆலோசனை கூறியுள்ளனர். சம்பவ இடத்தில் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



