
கோலாலம்பூர், ஜூலை-20 – 2026 ஃபிஃபா (Fifa) உலகக் கோப்பை காற்பந்து போட்டியின் அனைத்து ஆட்டங்களையும் இலவசமாக ஒளிபரப்பிய வெற்றியைத் தொடர்ந்து, உலகத் தரம் வாய்ந்த மேலும் பல விளையாட்டு போட்டிகளை ஆர்டிஎம் (RTM) விரைவில் ஒளிபரப்பவுள்ளதாக தகவல் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் (Datuk Seri Fahmi Fadzil.) தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியை எத்தனை பேர் பார்த்தனர் என்பது குறித்து முழு விவரங்கள் ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
போட்டியின் தொடக்கத்தில் சில தொழில்நுட்பப் பிரச்சினைகள் ஏற்பட்டாலும், அவை உடனடியாக சரிசெய்யப்பட்டதாகவும், இனி கைப்பேசி மூலமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இன்னும் எளிதாகப் பார்க்கும் வசதியையும் மேம்படுத்த ஆர்டிஎம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, ஒலிபரப்புத் துறை தலைமை இயக்குநர் அஷ்வாட் இஸ்மாயில் (Ashwad Ismail), முக்கிய விளையாட்டு போட்டிகளை மக்களுக்கு வழங்க உள்ளூர் ஊடகங்களுடன் ஆர்டிஎம் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்றார்.
ஒளிபரப்பு உரிமைக்காக போட்டியிடுவது அல்ல, மக்களுக்கு சிறந்த நிகழ்ச்சிகளை வழங்குவதே ஆர்டிஎம்மின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.



