இஸ்லாமாபாத், நவம்பர் 16 – புகைமூட்டம் மோசமானதால் பாகிஸ்தானில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட பஞ்சாப் பிரதேசத்தின் லாகூர் (Lahore) உள்ளிட்ட 2 முக்கிய நகரங்களில், சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
வாரத்திற்கு 3 நாட்கள் அங்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலுக்கு வந்துள்ளது.
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாமென்பதால், மருத்துவமனைகள் முழு விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, கிளினிக்குகள் செயல்படுவதும் சில மணி நேரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
18 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட பஞ்சாப் பிரதேசமே, இந்த நச்சுக் காற்றில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
13 மில்லியன் பேர் வாழும் லாகூரில் காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு அபாயகரமான அளவைத் தாண்டி, இம்மாதம் முழுவதும் உலகின் மிகவும் தூய்மைக்கேடான நகராக விளங்குகிறது.
மற்ற தெற்காசிய நகரங்களான இந்தியாவின் புது டெல்லி, வங்காளதேசத்தின் டாக்கா ஆகியவற்றிலும் இதே புகைமூட்டப் பிரச்னை மோசமாகியுள்ளது.
புது டெல்லியில் அனைத்து ஆரம்பப் பள்ளி மாணவர்களும் தற்போதைக்கு வீட்டிலிருந்தே படிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.
மாநகரின் மையப்பகுதியிலும் வெளியிலும் ஏறக்குறைய அனைத்துக் கட்டுமானத் திட்டங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சாலைப் போக்குவரத்தும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
2 வாரங்களாக மிகவும் ஆரோக்கியமற்ற அளவிலிருந்த காற்றின் தரம் திடீரென அபாயக் கட்டத்தை எட்டியதால் புது டெல்லி அரசாங்கம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.