
கோலாலம்பூர், செப்டம்பர்-18,
பெர்சாத்து மற்றும் பாஸ் கட்சிகளிடையே 15-ஆவது பொதுத் தேர்தல் நிதி குறித்து வெளிப்படையாகவே சர்ச்சை வெடித்துள்ளது எதிர்கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பைப்பும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்தப் பொதுத் தேர்தலில் பாஸ் பெர்சாத்துவின் தேர்தல் நிதியையே நம்பியிருந்ததாகக் கூறப்படுவதை,
பாஸ் உதவித் தலைவரும் பெரிகாத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநருமான டத்தோ ஸ்ரீ சனூசி நோர் திட்டவட்டமாக மறுத்தார்.
குறிப்பாக கெடா மாநிலத்தில், பாஸ் தனது தேர்தல் செலவுகளை உறுப்பினர்கள் அளித்த நன்கொடைகள் மற்றும் பாரம்பரிய “மைலோ டின்” நிதி திரட்டலின் மூலம் மேற்கொண்டது.
நிலைமை இவ்வாறிருக்க “யாருக்கு யார் பணம் கொடுத்தது என நானும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” என சனுசி சவால் விட்டார்.
பெர்சாத்து தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசினின் முன்னாள் உதவியாளர் மர்சூகி முஹமட் (Marzuki Mohamad) முன்னதாக முன்வைத்த குற்றச்சாட்டுக்கு சனுசி இவ்வாறு காட்டமாக பதிலளித்தார்.
பெரிக்காத்தான் கூட்டணியின் அனைத்து தேர்தல் செலவுகளையும் பெர்சாத்து ஏற்றுக்கொண்டதாகவும், பாஸ்க்கு முக்கியமான நிதியுதவியும் வழங்கியதாகவும் மார்சூகி கூறியிருந்தார்.
கடந்த வார பாஸ் பேராளர் மாநாட்டில் பேசிய சனுசி, நிதி பலமில்லாதவர்கள் எல்லாம் தலைமைப் பதவிக்கு ஆசைப்படுவதாகக் கூட்டணி கட்சிகளை ஜாடையாக பேசியதற்கு பதில் கூறும் வகையில் மார்சூகி அவ்வாறு கூறினார்.
ஆனால் சனுசியோ, கெடாவில் பாஸ் தான் முழு செலவையும் ஏற்றதோடு, பெர்சாத்து வேட்பாளர்களுக்குக் கூட உபகரணங்கள் வழங்கியதாகக் கூறினார்.
வெளிப்படையான இந்த கருத்து மோதல், பெரிக்காத்தான் கூட்டணியின் தலைமைப் பதவிக்கு நடக்கும் குடுமிப்பிடி சண்டையின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.
பெர்சாத்துவையும் முஹிடினையும் ஓரம் கட்டி விட்டு கூட்டணிக்குத் தலைமையேற்கவும் 11-ஆவது பிரதமர் வேட்பாளரை அனுப்ப தாங்கள் தயாராகி விட்டதையுமே பாஸ் இதன் மூலம் சொல்ல வருவதாகக் தெரிகிறது.