மும்பை, அக்டோபர்-10 – இந்தியாவின் பிரபல தொழிலதிபரும் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா (Ratan Tata) உடல்நலக் குறைவால் காலமானார்.
அவருக்கு வயது 86.
வயது மூப்பு, இரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் அவர் மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்தவர் நேற்றிரவு காலமானதை டாடா குழுமத்தின் நடப்பு தலைவர் நடராஜன் சந்திரசேகரன் உறுதிப்படுத்தினார்.
ரத்தன் டாடாவின் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
தொழிலியல் தூரநோக்குச் சிந்தனையாளர் என ரத்தன் டாடாவுக்கு புகழாரம் சூட்டிய மோடி, தொழில் வளர்ச்சிக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்குமான அவரின் பங்களிப்பு காலத்திற்கும் நிலைத்து நிற்குமென்றார்.
1991-ஆம் ஆண்டில் Tata Sons தலைவராக பொறுப்பேற்ற ரத்தன் டாடா, தனது சீரியத் தலைமைத்துவத்தாலும் நிர்வாகத் திறன் மற்றும் திட்டமிடல் மூலம் டாடா குழுமத்தின் வருவாயை பன்மடங்கு அதிகரிக்கச் செய்தார்.
1991-ல் வெறும் 10,000 கோடி ரூபாயாக இருந்த வருவாய், 2011-2012-ஆம் ஆண்டுகளில் 100 பில்லியன் டாலராக அதிகரித்தது.
அவரது பதவி காலத்தில் தான், இந்தியாவுக்கு வெளியே Tetley, Corus, Jaguar, Land Rover உள்ளிட்ட பல பெருநிறுவனங்களை டாடா குழுமம் கையப்படுத்தியது.
2008-ஆம் ஆண்டு Tata Nano என்ற சிறிய ரக காரை அறிமுகப்படுத்தியதும் அவரின் பெருந்திட்டங்களில் ஒன்றாகும்.
இப்படி இந்தியத் தொழில்துறையின் முகமாகத் திகழ்ந்த அதே சமயம் தனது சமூகக் காரியங்களாலும் அனைவராலும் மதிக்கப்பட்டவராக அவர் வலம் வந்தார்.
இந்திய கல்வி நிறுவனங்களுக்கு நன்கொடை, சுகாதார பராமரிப்புத் திட்டங்களுக்கு நிதியுதவி, நாய்கள் உள்ளிட்ட வளர்ப்புப் பிராணிகளின் மறுவாழ்வு என சமூக நல திட்டங்களாலும் எல்லா தரப்பு மக்களின் நன்மதிப்பைபும் பெற்றவராவார்.