
கோலாலம்பூர், அக்-14–சவூதி அரேபியாவின் ரியாத், மதீனா மற்றும் மக்கா நகரங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் சுமார் 250 மலேசிய மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர். அவர்களின் கல்வி நடவடிக்கைகள் சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியாத்தில் உள்ள Raja Khalid சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, அங்குள்ள பல பல்கலைக்கழகங்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் இணையவழி வகுப்புகளுக்கு மாறியுள்ளன. மதீனா மற்றும் மக்காவில் நேரடி வகுப்புகள் வழக்கம்போல் நடைபெற்று வருகின்றன.
ரியாத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் சுமார் 90 மலேசிய மாணவர்கள் கல்வி கற்று வருவதாக அங்கு பயிலும் மலேசிய மாணவர் Abdullah தெரிவித்தார். தாக்குதல்களைத் தொடர்ந்து தங்களது தங்குமிடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டதாகவும், வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும் குறிப்பிட்ட அவர், பாதுகாப்பு நிலவரம் குறித்து அதிகாரிகள் மற்றும் மலேசியத் தூதரகத்தின் மேலதிக அறிவுறுத்தல்களுக்காகக் காத்திருப்பதாகக் கூறினார்.
இவ்வேளையில், மதீனாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் சுமார் 150 மலேசிய மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அங்குள்ள மலேசிய மாணவர் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். வகுப்புகள் வழக்கம்போல் நடைபெறுவதாகவும், நிலவரம் குறித்த அண்மைய தகவல்களைப் பெற ஜெட்டாவில் உள்ள மலேசியத் தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
மக்காவில் சுமார் 10 மலேசிய மாணவர்கள் இருப்பதாகவும், அங்கு வகுப்புகளும் உம்ரா வழிபாடுகளும் சுமூகமாக நடைபெறுவதாகவும் அங்குள்ள மலேசிய மாணவர் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். புனிதத் தலங்களுக்குச் செல்வதற்கு கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்றும், இதுவரை அதிகாரிகளிடமிருந்து அச்சுறுத்தல் தொடர்பான அறிவிப்புகள் வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.



