
கோலாலம்பூர் , ஏப் 14 – வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை ஓட்டும் மலேசியர்கள் RON95 பெட்ரோல் வாங்க அனுமதிக்கப்படுவதில்லை காரணம் எரிபொருள் மானியம் வாகனப் பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளதே தவிர வாகன ஓட்டுநரின் நாட்டை அடிப்படையாக கொண்டிருக்கவில்லை. இந்த கட்டுப்பாடு மலேசியாவின் நீண்டகால எரிபொருள் மானியக் கட்டுப்பாட்டு கட்டமைப்பின் ஒரு பகுதியாகும் என உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் அமலாக்க தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ அஸ்மான் அடாம் ( Azman Adam ) தெரிவித்தார். இது கசிவுகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டது, குறிப்பாக எல்லை மாநிலங்களில் விலை வேறுபாடுகள் கடத்தல் மற்றும் இடைத்தரகர்களை லாபகரமானதாக மாற்றியது என அவர் சுட்டிக்காட்டினார்.
மோட்டார் சைக்கிள்கள் உட்பட அனைத்து வெளிநாட்டுப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கும் RON95 விற்பனை செய்வதற்கான தடை 2022 ஆம் ஆண்டு ஜூன் முதல் அமலில் உள்ளது என்பதோடு இந்த தடை இன்னமும் தொடர்ந்து அமலில் இருந்துவருகிறது. மலேசிய வாகன ஓட்டிகளுக்கு எரிபொருள் விநியோகம் முன்னுரிமை
அளிக்கப்படுவதை இந்தக் கொள்கை உறுதிசெய்கிறது என்பதோடு ஒதுக்கீட்டைப் பாதிக்கக்கூடிய அல்லது கசிவுகளுக்கு வழிவகுக்கும் துஷ்பிரயோகம் மற்றும் தவறான பிரதிநிதித்துவத்தைத் தடுக்க உதவுகிறது. இந்த கட்டுப்பாடு பெட்ரோல் நிலையங்களில் செயல்பாட்டு சவால்களை நிவர்த்தி செய்ததாக அஸ்மான் மேலும் கூறினார்.



