டாக்கா,டிசம்பர்-1 – வங்காள தேசத்தில் இந்து மதத் தலைவர் ஒருவர் கைதான சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், மேலுமோர் இந்து மத குரு கைதாகியுள்ளார்.
முன்னதாக வங்காளதேசத்தின் தேசிய கொடியை அவமதித்ததாக கூறி, சின்மய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.
அவரின் கைதுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அவரைப் பார்ப்பதற்காகச் சென்ற Shyam Das Prabhu என்பவர், கைது ஆணை இல்லாமலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ண தாஸ் கைதானதால் நாடளாவிய நிலையில் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்திய நிலையில், இப்படி அடுத்தடுத்து மத குருக்கள் கைதாவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்காளதேசத்தில் மாணவர் போராட்டம் வன்முறையாக வெடித்து, பிரதர் பதவியைத் துறந்து ஷேக் ஹசீனா நாட்டை விட்டே ஓடியதிலிருந்து, சிறுபான்மையினரின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தீ வைத்தல், சூறையாடுதல், சேதப்படுத்துதல், தெய்வங்கள் மற்றும் கோவில்களை இழிவுபடுத்துதல் போன்ற பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
வங்காளதேச இந்துக்கள், ஷேக் ஹசீனா தலைமையிலான லீகா அவாமி (Liga Awami) கட்சியின் விசுவாசிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்காளதேச மக்கள் தொகையில் சுமார் 8 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 31 லட்சம் பேர் இந்துக்கள் ஆவர்.