கோலாலம்பூர், நவம்பர்-26, 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களின் வாகனமோட்டும் உரிமத்தை புதுப்பிக்கும் முன், திறன் சோதனை மற்றும் சுகாதார மதிப்பீட்டை மேற்கொள்ள வேண்டுமென்ற பரிந்துரை ஆராயப்படும்.
போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் அவ்வாறு கூறியுள்ளார்.
அதுவொரு நல்ல பரிந்துரை என்றாலும், எந்தவொரு முடிவும் எடுக்கப்படும் முன், ஆழமாக ஆராயப்பட வேண்டுமென அவர் சொன்னார்.
எது எப்படியிருப்பினும், வாகனமோட்டும் உரிமம் புதுப்பிக்கப்படுவதில் கூடுதல் நிபந்தனைகளை விதிப்பதில் அமைச்சு அவசரம் காட்டாது என்றார் அவர்.
வாகனமோட்டும் உரிமத்தைப் புதுப்பிக்க கூடுதல் நிபந்தனைகள் விதிக்கப்பட்டால், நாட்டில் முதியவர்களை உட்படுத்திய சாலை விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியுமென முன்னதாக ஊடகங்களில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
வயதானவர்கள் எந்த வயது வரை சாலைகளில் வாகனமோட்டலாம் என விதிமுறைகள் வரையறுக்கவில்லை.
இந்நிலையில், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து வாகனமோட்ட விரும்பினால், அவர்கள் தங்களின் உரிமத்தைப் புதுப்பிக்கும் போது, திறன் சோதனை மற்றும் அவர்களின் ஆரோக்கியம் மதிப்பீடு செய்யப்பட்டால், அவர்கள் வாகனமோட்டுவதற்குத் தகுதியானவர்களே என்பதை உறுதிச் செய்துக்கொள்ள முடியும் என்ற அடிப்படையில், அப்பரிந்துரை முன்வைக்கப்பட்டது.