கோலாலம்பூர், டிச 19 – நாடு வலுவான நில நடுக்கத்தை எதிர்கொள்ளக்கூடும், ஆனால் இவற்றைக் கணிப்பது கடினம் என்று மெட் மலேசியா எனப்படும் மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நில நடுக்கத்தை துல்லியமாக கண்காணிக்க எந்த தொழிற்நுட்பமும் இல்லையென மெட் மலேசியாவின் தலைமை இயக்குநர் முகமட் ஹிஷாம் முகமட் ஹனிப் ( Mohd Hisham Mohd Anip) தெரிவித்தார். நாடு முழுவதிலும் அமைக்கப்பட்ட நில அதிர்வு நிலையங்களைப் பயன்படுத்தி நில நடுக்கத்தை கண்டறிந்து அவற்றின் அளவு, இருப்பிடம் மற்றும் ஆழம் பற்றிய தகவல்களை மெட் மலேசியா வழங்க முடியும் என அவர் கூறினார். கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி சபா, ரானாவில் ரெக்டர் கருவியில் 6.0 அளவில் பதிவான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. மிதமான நிலநடுக்கங்கள் அந்த மாநிலத்தில் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக முகமட் ஹிசாம் கூறினார்.
சபா மாநிலம் முழுவதும் உணரப்பட்ட அந்த நிலநடுக்கத்தில் கினாபாலு மலையில் ஏறிக் கொண்டிருந்த 18 பேர் உயிரிழந்தனர். அப்பகுதியில் உள்ள உள்கட்டமைப்புகளும் சேதமடைந்தன. இந்த வாரம் தொடர்ந்து இரண்டு நாட்களில் மலேசியா மிதமான நிலநடுக்கங்களை அனுபவித்ததை அடுத்து, மலேசியாவில், குறிப்பாக சபாவில், நிலநடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் குறித்து முகமட் ஹிஷாம் கருத்துரைத்தார். இவ்வாரம் திங்கட்கிழமை ரெக்டர் கருவியில் 2.8 அளவில் பதிவான நிலநடுக்கம் பிற்பகல் மணி 2.56 அளவில் ஏற்பட்டது. அதை தொடர்ந்து மறுநாள் காலை செவ்வாய்க்கிழமை ரெக்டர் கருவியில் 3.1 அளவில் பதிவான மற்றொரு நிலநடுக்கம் அங்கு ஏற்பட்டது.