கூலாய், அக்டோபர்-8. ஜோகூர், சீனாய் அனைத்துலக விமான நிலையமருகே சாலையோரத்தில் வைத்து ஓர் ஆடவர் சரமாரியாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், 7 சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.
25 முதல் 40 வயது வரையிலான அவர்கள் ஸ்கூடாய் மற்றும் ஜோகூர் பாரு சுற்று வட்டாரங்களில் நேற்றிரவு கைதானதாக, கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் தான் செங் லீ (Tan Seng Lee) தெரிவித்தார்.
சரவாக், மீரி விமான நிலையத்தில் பயணிகள் புறப்படும் பகுதியில் உட்காருமிடத்திற்கான போட்டாப் போட்டியில் தொடங்கிய பிரச்னை, ஜோகூர் சீனாய் வரை தொடர்ந்திருப்பது போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது.
This Is Johor என்ற முகநூல் பக்கத்தில் நேற்று முன்தினம் பதிவேற்றப்பட்டு வைரலான வீடியோவில், சாலையோரத்தில் அடாவடியில் இறங்கிய கும்பல், முன்பின் தெரியாத ஓர் ஆடவரை கடுமையாகத் தாக்குவது தெரிந்தது.
பாதிக்கப்பட்ட நபரான 39 வயது ஆடவருக்கு அதில் சிராய்ப்புக் காயங்களுடன், கீறல்களும் வீக்கமும் ஏற்பட்டன.
கைதான எழுவரில் நால்வருக்கு, போதைப்பொருள் உள்ளிட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் பல்வேறு குற்றப்பதிவுகள் உள்ளன.
அவர்கள் அனைவரும் விசாரணைக்காக 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய ஒருவருக்கு போலீஸ் வலை வீசியுள்ளது.