
ஷா அலாம், ஏப் 22 -வெள்ளப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கான அனைத்து அம்சங்களையும் சிலாங்கூர் அரசாங்கம் ஆராய்ந்து வருவதோடு இது குறித்த விவரங்கள் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் அறிவிக்கப்படும்.
இந்த விவரங்கள் உள்கட்டமைப்பு மற்றும் விவசாயக் குழுவிற்கான சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹாசிமிற்கு ( Izham Hashim) தெரிவிக்கப்படும் என்று சிலாங்கூர் மந்திரிபெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
நெதர்லாந்து உட்பட அனைத்து அம்சங்களையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம், ஆனால் அதன் விவரங்களை இஷாம் முன்வைப்பார் என்று தாம் நினைப்பதாக அமிருடின் தெரிவித்தார்.
உண்மையில், 2023 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டுவரை , நெதர்லாந்து பிரதிநிதிகளுடன் ஒரு சந்திப்பு நடைபெற்றது. அதில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்பாடு என்ற நிலையை மட்டுமே எட்டியது.
எனினும் இந்த உடன்பாடு இன்னும் மாநில அளவில் எட்டப்படவில்லை. எனவே, எங்களால் முடிந்ததை நாங்கள் விரைவுபடுத்துவோம், மேலும் ஆட்சிக் குழு உறுப்பினர் இஷாம் , ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்குள் கூடுதல் விவரங்களை வழங்குவார் என அமிருடின் குறிப்பிட்டார்.



