
மலாக்கா, ஜூன்-6 – மலாக்காவில் உள்ள மசூதி ஒன்றின் பிரேத அறையில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டதாக பரவிய செய்தி குறித்து மலாக்கா போலீஸ் விளக்கம் அளித்துள்ளது.
50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கடந்த வியாழக்கிழமை அன்று காலை 9.12 மணிக்கு போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், மசூதி ஒன்றில் உதவியாளராகப் பணியாற்றும் 48 வயது நபர், மசூதியின் பிரேத அறையில் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகார் குறித்து தீவிர விசாரணை நடத்திய போலீஸ், அங்கு எந்தவொரு பாலியல் குற்றமும் அல்லது வன்கொடுமையும் நடக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியது.
விசாரணையின்படி, அங்கு எந்தவொரு கட்டாயப்படுத்துதலோ அல்லது மிரட்டலோ இருக்கவில்லை என்பதால், பரப்பப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், இந்த விவகாரத்தில் மசூதியின் இமாம் பாதிக்கப்பட்ட பெண்ணை போலீசில் புகார் அளிக்கவிடாமல் தடுத்ததாகவும், குற்றம் சாட்டப்பட்ட நபரை காக்கும் நோக்கில் புதிய உதவியாளர் ஒருவரை நியமித்ததாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின.
என்றாலும், குற்றம் சாட்டப்பட்ட அந்த மசூதி உதவியாளர் கடந்த மே மாதமே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்றும், ஆனால் அவரது விலகலுக்கான உண்மைக் காரணம் காரணம் மசூதி நிர்வாகத்திற்குத் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.



