
பெட்டாலிங் ஜெயா, ஜூலை-22-இந்தோனேசியாவின் வட சுமத்ராவில் ரிக்டர் அளவையில் 5.7 எனப் பதிவான நிலநடுக்கத்தால் கிள்ளான் பள்ளத்தாக்கில் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
அந்நிலநடுக்கம் மதியம் 12.18 மணிக்கு ஏற்பட்டது. இந்தோனேசியாவின் Langsa நகருக்கு தென்மேற்கே 55 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் அது மையமிட்டிருந்தது. தீபகற்ப மலேசியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் அதிர்வுகள் உணரப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெட்டாலிங் ஜெயா, காஜாங், பூச்சோங், கிள்ளான், செலாயாங் ஆகிய பகுதிகளில் நில அதிர்வுகளை உணர்ந்ததாக சில இணையவாசிகள் கூறியுள்ளனர்.
நில அதிர்வுகள் குறித்த தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, Bandar Tasik Selatanனில் உள்ள ஒரு கட்டிடம், காஜாங் நகராண்மைக் கழகக் கட்டிடம், சுபாங் ஜெயாவில் உள்ள Inti கல்லூரிக் கட்டிடம் ஆகியவற்றை ஆய்வு செய்ய தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அறிக்கையொன்றில் தெரிவித்தது.
வட சுமத்ராவில் ஏற்படும் நிலநடுக்கங்கள் மலேசியாவில் நில அதிர்வுகளை ஏற்படுத்துவது இது முதல் முறையல்ல. கடந்த மார்ச் மாதம், வட சுமத்ராவின் மேற்கு கடற்கரைக்கு அப்பால் ஏற்பட்ட 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், தீபகற்ப மலேசியாவின் வட மாநிலங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நில அதிர்வுகளை ஏற்படுத்தியது. இருப்பினும் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை.
2022 ஆண்டு பிப்ரவரியில் வட சுமத்ராவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நில அதிர்வுகளைத் தொடர்ந்து, கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் மலாக்காவில் உள்ள பல உயரமான கட்டிடங்களில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.



