
கோலாலம்பூர், செப்- 5 –தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில், PERTAMA எனப்படும் Persatuan Bekas Pelajar Sekolah Tamil Wilayah Kuala Lumpur ஏற்பாட்டில் ‘நித்திரைக் கதைகள்’ புத்தகம் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி வெளியீடு காணவுள்ளது.
கோலாலம்பூர் தேசிய நூலக அரங்கில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், உயர்கல்வி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ‘நித்திரைக் கதைகள்’ புத்தகத் தொகுப்புகளை வழங்கும் முயற்சியும் முன்னெடுக்கப்படுகிறது.
இந்நிலையில், தொழில்நுட்பம், சமூக ஊடகங்கள் மற்றும் AI பயன்பாடு அதிகரித்து வரும் இன்றைய சூழலில், குறிப்பாக தமிழ் சமூகத்தில் வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவது பெரும் சவாலாக உள்ளது என செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யுனேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.
புத்தகங்கள் முறையான சரிபார்ப்புகளுக்குப் பின்னர் வெளியிடப்படுவதால், நம்பகமான அறிவுசார் தகவல்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதில் அவை முக்கியப் பங்காற்றுவதாகக் கூறிய அவர், தமிழ் நூல் வெளியீடுகளும் வாசிப்பை ஊக்குவிக்கும் முயற்சிகளும் மேலும் அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதுபோன்ற முயற்சிகளுக்கு அமைச்சு தொடர்ந்து ஆதரவு வழங்குவதுடன், தேசிய நூலகம் உள்ளிட்ட வசதிகளைப் பயன்படுத்தி மேலும் பல தமிழ் நூல் வெளியீடுகளை முன்னெடுக்க எழுத்தாளர்கள் மற்றும் அமைப்புகள் முன்வர வேண்டும் என்றும் யுனேஸ்வரன் அழைப்பு விடுத்தார்.



