
ஈப்போ, செப்டம்பர்-5,பேராங், ஈப்போ, பெங்காலான் ஜெயாவில் 26 வயது இளைஞர் ஒருவரைத் தாக்கிப் படுகாயப்படுத்திய விவகாரம் தொடர்பில் 11 பேரைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில், 2 கார்களில் வந்த 5 நபர்கள் அந்த இளைஞரைத் துரத்தித் தாக்கினர்.
அவர்களிடமிருந்து தப்பியோடிய இளைஞர் கிந்தா ஆற்றில் குதித்த நிலையில், சந்தேக நபர்கள் அவரைப் வெட்டுக்கத்தியால் சரமாரியாக வெட்டினர்.
இதில் அவருக்கு முகம், கை, கால் மற்றும் பின்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
பொது மக்களின் உதவியோடு அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் குறித்துப் பேசிய மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ Mohd Alwi Zainal Abidin, திட்டமிடப்பட்ட குற்றவியல் கும்பல் ஒன்று பழிவாங்கும் நோக்கத்தில் இந்தத் தாக்குதலை நடத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறினார்.
கைதான 22 முதல் 41 வயதுக்குட்பட்ட 11 நபர்களுக்கும் ஏற்கனவே போதைப்பொருள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான குற்றப் பின்னணி இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் குற்றவியல் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.



