
பெய்ஜிங், செப்டம்பர்-5,சீனாவின் Shenzhen நகரைச் சேர்ந்த 32 வயது ஆடவர் ஒருவர், Suma என்ற பெயரில் ‘முதுகு சொறியும்’ புதுமையான மையத்தைத் தொடங்கி மாதத்திற்கு 100,000 யுவான் அதாவது சுமார் 15,000 அமெரிக்க டாலர் வரை வருமானம் ஈட்டி வருகிறார்.
உடம்புபிடி மையங்கள் போலச் செயல்படும் இந்தக் கடைகளில், வாடிக்கையாளர்களைப் படுக்கவைத்து, சிறப்பு நகங்களைப் பயன்படுத்தி ஊழியர்கள் அவர்களின் உடலை மிருதுவாகச் சொறிந்து விடுகின்றனர்.
ஒரு மணி நேரச் சேவைக்கு 300 யுவான் அல்லது சுமார் 40 அமெரிக்க டாலர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மன அழுத்தத்தைக் குறைக்கவும் தூக்கத்தின் தரத்தை உயர்த்தவும் இந்த சேவை பெரிதும் உதவுவதாக, ‘பயனடைந்த’ வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
சிறுவயதில் தந்தை தனது முதுகைச் சொறிந்து தூங்க வைத்த நினைவால் ஈர்க்கப்பட்டு இச்சேவையைத் தொடங்கியதாகக் கூறும் அவ்வாடவர், சீனா முழுவதும் 100 கிளைகளைத் திறக்க இலக்கு வைத்துள்ளார்.



