
கோலாலாம்பூர், அக்டோபர்-14,முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகளுக்கான சேவைகளையும் உதவிகளையும் விரிவுபடுத்தும் வகையில் 2027 பட்ஜெட் அமைந்திருப்பதாக, மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு வருணித்துள்ளது.
சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் உரிய பாதுகாப்பையும் ஆதரவையும் பெற வேண்டும் என்ற நோக்கில் இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் டத்தோ ஸ்ரீ நேன்ஸி ஷுக்ரி கூறினார்.
முதியோர் புறக்கணிக்கப்படுவதைத் தடுக்க புதிய ‘முதியோர் சட்ட மசோதா’ உருவாக்கப்படும் வேளையில், 55 மற்றும் 60 வயதை அடையும் EPF உறுப்பினர்கள் ‘i-Emas’ திட்டத்தின் கீழ் மாதந்தோறும் சேமிப்பைப் பெறலாம்.
அதோடு, செராஸ் தாமான் டேசாவில் முதியோருக்கான தினசரி பராமரிப்பு மையங்களும் அமைக்கப்படவுள்ளன.
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசப் பொதுப் போக்குவரத்து அனுமதி வழங்கப்படுவதுடன், சிறப்புக் கல்வி ஆசிரியர்களின் மாதாந்திர ஊக்கத்தொகை RM300-ராக உயர்த்தப்படுகிறது.
அதேவேளை, ஏழைக் குடும்பங்களின் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான உதவி RM250-தாகவும், 7 முதல் 18 வயது வரையிலானோருக்கு RM200-ராகவும் அதிகரிக்கப்படுகிறது.
தவிர, 9 மாநிலங்களில் 6,000 குழந்தைப் பராமரிப்பாளர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இந்த முன்னெடுப்புகள் மக்களின் அன்றாட வாழ்வில் உறுதியான ஆதரவை வழங்கி, சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தும் என டத்தோ ஸ்ரீ நேன்ஸி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.



