
கோலாலம்பூர், அக்-20-இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காடு மற்றும் நிலத் தீச் சம்பவங்களுடன் தனது துணை நிறுவனங்களையும் ஊழியர்களையும் தொடர்புபடுத்தும் குற்றச்சாட்டுகளை SD Guthrie Berhad மறுத்திருக்கிறது. இந்தோனேசியாவில் உள்ள தனது தோட்டங்களில் தற்போது தீ விபத்துகள் ஏதும் இல்லை என்றும், குற்றச்சாட்டுகளுக்கு நம்பகமான ஆதாரங்கள் இல்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொது அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள சில நிறுவனங்கள் SD Guthrie-க்குச் சொந்தமானவை அல்ல; அதன் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுபவையும் அல்ல. எனவே, உரிமை தொடர்பான தவறான மற்றும் பழைய தகவல்களைத் திருத்த வேண்டும் என அந்நிறுவனம் வலியுறுத்தியது.
தீயைத் தடுக்க நீர்மட்டக் கண்காணிப்பு, சமூகத் தீ தடுப்புத் திட்டங்கள் மற்றும் விவசாயிகளுக்கான பொறுப்பான நில நிர்வாக பயிற்சிகள் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் தாங்கள் மேற்கொண்டு வருவதாகவும் அது கூறியது.
தங்களது இந்தோனேசியத் துணை நிறுவனமான Minamas Plantation-இல், 1,005 பயிற்சி பெற்ற பணியாளர்களைக் கொண்ட 67 தீயணைப்புக் குழுக்கள் உள்ளன. ட்ரோன்கள் மற்றும் சில நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, நிறுவனத்தின் தோட்டங்கள் மற்றும் அருகிலுள்ள சுமார் 322,000 ஹெக்டேர் சமூக நிலங்களில் தீயைக் கண்காணிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படுவதாக அந்நிறுவனம் விளக்கியது.
2026 ஜனவரி முதல் செப்டம்பர் வரை, அக்குழுக்கள் 2,411 தீ விபத்துகளை அணைத்துள்ளன. அவற்றில் 2,376 தீ விபத்துகள் சமூக நிலங்களில் ஏற்பட்டவை. நிறுவனத்தின் தோட்டங்களுக்கு வெளியே ஏற்படும் தீயைக் கட்டுப்படுத்துவதில் ஈடுபடுவது, அத்தீ விபத்துகளுக்கு அந்நிறுவனமே காரணம் என அர்த்தமாகாது என்றும் அது தெளிவுபடுத்தியது.
தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக மாதந்தோறும் சுமார் 3.5 பில்லியன் இந்தோனேசிய ரூபியா (RM800,000) செலவிடப்படுகிறது. இந்தோனேசிய அதிகாரிகளுடன் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தத் தொடர்ந்து செயல்பட ஆக்கப்பூர்வமாக இருப்பதாக குறிப்பிட்ட SD Guthrie, தவறான தகவல்களைத் திருத்தவும் தேவையான கலந்துரையாடல்களை மேற்கொள்ளவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தது.



